மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கே.ஜி சாவடி காளியாபுரம் பகுதியில் சின்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான ராமகிருஷ்ணன் மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஐஸ்வர்யா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் காதலர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வேலந்தாவளம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதனை பார்த்ததும் அதே பகுதியில் வசிக்கும் சித்திக் மற்றும் லிங்கேசன் என்ற இரண்டு வாலிபர்கள் மற்றொரு மோட்டார் சைக்கிளில் அவர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த ஒரு லாரி 2 மோட்டார் சைக்கிள்களின் மீதும் மோதி விட்டது. இந்த விபத்தில் ராமகிருஷ்ணனும், ஐஸ்வர்யாவும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த லிங்கேசன் மற்றும் சித்திக்கை அருகில் உள்ளவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லிங்கேசன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.