குடிநீர் தொட்டியில் குரங்கு இறந்து கிடந்ததால் அந்த தண்ணீரை குடித்த கிராமமக்கள் மர்ம காய்ச்சலில் அவதிப்பட்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏர்கோள் பட்டியில் 700க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு அமைந்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலமாக சுற்றிருக்கும் கிராமப் பகுதிகளுக்கு வழங்கபட்டு வந்த தண்ணீரில் துர்நாற்றம் வீசியுள்ளது. அதனால் கிராமப்புறத்தில் உள்ள பொதுமக்கள் தொட்டியின் மேல்பகுதியில் ஏறிப் பார்த்துள்ளனர். அப்போது தொட்டியின் தண்ணீருக்குள் அழுகிய நிலையில் ஒரு குரங்கு இறந்து கிடந்ததை கிராமமக்கள் கண்டுள்ளனர்.
அதன் பின் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தொட்டியிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு சுத்தம் செய்யப் பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தொட்டியின் மேல் பகுதியில் ஏதேனும் உள்ளே விழாதவாறு இரும்பு கதவு வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்ற 10 நாட்களாக சுத்தமற்ற தண்ணீரை குடித்த அப்பகுதியில் வசிக்கும் 100க்கும் அதிகமான பொதுமக்கள் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இதற்காக அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என கிராமப்புற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.