பீகாரில் பாலியல் தொல்லையை தடுத்த உறவினர்கள் மீது ஒரு கொடூர கும்பல் ஆசிட் வீசி தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள தவுத்நகரில் இளம் பெண் ஒருவருக்கு இளைஞர் கும்பல் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளது. இதனையறிந்த அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் கும்பலை தட்டிக்கேட்டு தடுத்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் , மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கும்பல் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பலுடன் தொடர்புடையவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது ஆசிட்டை வீசி தாக்கியுள்ளனர். இதனால் அங்கிருந்த 16 பேர் காயம் அடைந்தனர். அசிட் வீச்சில் காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதில் 8 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறை சம்மந்தப்பட்ட 5 பேரை கைது செய்துள்ளது.