தண்ணீரைத் தேடி வந்த மான் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் இருந்து திருப்பதிக்கு செல்லும் ரயில்வே பாதையானது காட்டுபகுதி வழியாக அமைந்துள்ளது . இந்தக் காட்டுப் பகுதியில் ஏராளமான மான்கள் வாழ்ந்து வருகின்றது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மூன்று மான்கள் அப்பகுதியில் சென்ற ரயிலில் அடிபட்டு இறந்துவிட்டது. இந்நிலையில் அந்த காட்டுப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று தண்ணீரைத் தேடிக்கொண்டு அந்த ரயில் தண்டவாளத்திற்கு சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக சென்ற ரயிலில் அடிபட்டு புள்ளிமான் தண்டவாளம் அருகே இறந்து கிடந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புள்ளி மானின் உடலை கைப்பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்த புள்ளி மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்த பிறகு அதனை எரித்து விட்டனர். மேலும் பொதுமக்கள் மான்கள் இதுபோன்று அடிக்கடி ரயிலில் அடிபட்டு இறப்பதைத் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.