பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் வட அயர்லாந்து பிரித்தானியாவின் ஒரு பகுதி அல்ல என்ற அர்த்தத்தில் கருத்து ஒன்றை தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறி இருப்பதை பொறுத்து கொள்ள முடியாமல் கோபத்தை வெளிப்படுத்தி வரும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பிரித்தானியாவில் நடந்த ஜி-7 மாநாட்டில் முக்கியமான சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கும், பிரான்சுக்கும் இடையே மீன் பிடிப்பது தொடர்பாக பிரச்சினை இருந்து வரும் நிலையில் பிரித்தானியா மீதான தங்களது கோபத்தை பிரெஞ்சு ஜனாதிபதியும், மக்களும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் ஐரோப்பிய ஒன்றிய தலைமையும் அவர்களுக்கு துணை நிற்பது பெரும் வேடிக்கையான ஒன்றாக உள்ளது.
தற்போது பிரித்தானியாவிலிருந்து குளிரூட்டப்பட்ட இறைச்சி முதலான உணவுப் பொருட்கள் பிரித்தானியாவின் ஒரு பகுதியான வட அயர்லாந்துக்கு அனுப்பப்படுவதில் தாமதம் ஏற்படுத்தும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக ஜி-7 மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானிடம் கேள்வி ஒன்றை எழுப்பியதோடு, இறைச்சி முதலான உணவு பொருள்கள் டௌலூஸ் நகரிலிருந்து பாரிஸுக்கு கொண்டு செல்லப்படுவதை உங்கள் நீதிமன்றம் ஒன்று தடுத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு டௌலூஸ்-ம் பாரிஸும் ஒரே நாட்டின் பகுதிகள் தான் என்று ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பதில் அளித்திருப்பது பிரித்தானிய பிரதமருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் வட அயர்லாந்து பிரித்தானியாவின் ஒரு பகுதி அல்ல என்று கூறி இருப்பது ஒட்டுமொத்த பிரித்தானியர்களையும் கொந்தளிக்கச் செய்துள்ளது.
மேக்ரானின் இந்த கருத்துகள் தாக்குதல் ரீதியானவை என்று பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டோமினிக் ராப் கருத்து தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் பிரித்தானியாவின் ஒருமைப்பாட்டுக்கு பிரான்ஸ் ஜனாதிபதியும், பிற ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களும் சிறிதாவது மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.