மின்வாரிய அலுவலகத்தில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்தவர்களை உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் கணேசன் என்பவர் வருவாய் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசன் வசூல் செய்யப்படும் பணத்தை அலுவலகத்தில் முறையாக செலுத்தாமல் கையாடல் செய்துள்ளார். மேலும் இவருக்கு கணக்குப் பிரிவு ஊழியரான செல்வம் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். இது குறித்து அறிந்த அதிகாரிகள் அலுவலகத்தின் வரவு-செலவு கணக்குகளை சோதனை செய்தபோது, அதில் 2 கோடியே 80 லட்சம் ரூபாயை கையாடல் செய்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் மின்வாரிய அதிகாரிகள் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து மின் வாரிய உயர் அதிகாரிகள் 2 கோடியே 80 லட்சம் ரூபாயை கையாடல் செய்த குற்றத்திற்காக கணேசன் மற்றும் செல்வம் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.