பைனான்சியரை மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடிப்பதற்கு உதவியாக இருந்த பெண் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் முருகன் என்கிற அருள்வாணன் வசித்து வருகிறார். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் தனது வீட்டில் தனியாக இருந்த போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் 3 பேர் அவரிடம் இருந்த செல்போன் பணம் மற்றும் 9 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கெலமங்கலம் காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முருகனுக்கும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து திவ்யாவின் திட்டப்படி கெலமங்கலம் பகுதியில் வசிக்கும் அந்தோணி, வெங்கடேஷ் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராஜா, மஞ்சுநாத் போன்றோர் உதவியுடன் 3 பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் கெலமங்கலம் காவல்துறையினர் திவ்யா உள்பட 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் 7000 ரூபாய் பணம் மற்றும் தங்க நகையை மீட்டனர். அதோடு தலைமறைவான திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.