ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை தொடர்ந்து வருகிறது. அத்துடன் ஜெருசலேம் நகரம் எந்த நாட்டிற்கு சொந்தம் என்பதில் இரு நாடுகளுக்கும் அடிக்கடி மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 10 ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா நகரில் உள்ள ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையே 11 நாட்களாக கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பிலும் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் . இதில் சுமார் 2000 பேர் படுகாயமடைந்தனர். இந்த மோதல் விவகாரத்தில் பல்வேறு சர்வதேச நாடுகளும் தொடர்ந்து அழுத்தத்தை கொடுத்ததால் இரு தரப்புக்கும் இடையே சண்டை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் உள்ள மேற்கு கரை பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வருகிற யூத குடியிருப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று முன்தினம் பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் நிலவியது . இதனால் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர் . இதில் பாலஸ்தீன நாட்டை சேர்ந்த 15 வயது சிறுவன் கொல்லப்பட்டான். மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் படுகாயமடைந்தனர் .இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.