லோடு ஆட்டோவில் கடத்தி வந்த 500 கிலோ புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எள்ளுவிளை பேருந்து நிறுத்தம் அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அந்த லோடு ஆட்டோவில் தடைசெய்யப்பட்ட 500 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்பின் அந்த லோடு ஆட்டோவில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வசிக்கும் முருகன், வெங்கடேச பெருமாள் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 500 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் லோடு ஆட்டோ போன்றவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.