கட்டுப்பாட்டை இழந்த வேன் தம்பதியினரின் மோட்டார் சைக்கிள் மீது கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள செந்தாம்பாளையம் பகுதியிலிருந்து தாராபுரம் நோக்கி பனியன் துணிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று வேகமாக சென்றுள்ளது. இந்த வேனை பாலாஜி நகர் பகுதியில் வசிக்கும் கார்த்திக் குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த வேன் பண்ணாரி அம்மன் நகர் சாலையில் இருக்கும் வளைவில் திரும்ப முயற்சிக்கும் போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அவ்வழியாக சென்று கொண்டிருந்த ராஜா-கோமதி தம்பதிகளின் மோட்டார் சைக்கிளின் மீது கவிழ்ந்து விட்டது.
இந்த விபத்தில் தம்பதியினர் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிழ்ந்து கிடந்த வேனை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.