பிரான்ஸ் நாட்டை சேர்ந்த யூபிஐ சாஃப்ட் நிறுவனம் அவதார் படத்தில் உள்ள கதாபாத்திரங்களை மையமாக கொண்டு கணினி விளையாட்டு ஒன்றை உருவாக்கியுள்ளது.
பிரான்ஸ் நிறுவனம் உலக அளவில் புகழ்பெற்ற அவதார் திரைப்பட கதையினை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள டிஜிட்டல் விளையாட்டின் முன்னோட்டம் சமீபத்தில் அமெரிக்காவில் வெளியாகியுள்ளது. பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் அவதார் திரைப்படத்தின் 2-வது பாகத்தை உருவாக்கி வரும் நிலையில் அந்த படமானது 2022-ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த யூபிஐ சாஃப்ட் நிறுவனம் அவதார் படத்தில் உள்ள கதாபாத்திரங்களை மையமாக கொண்டு கணினி விளையாட்டு ஒன்றை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அவதார்: பிராண்டிர்ஸ் ஆஃப் பண்டோரா என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த கணினி விளையாட்டின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் அந்த வீடியோ விளையாட்டை ஏராளமான இளைஞர்கள் விளையாடி மகிழ்ந்துள்ளனர். தீய சக்திகளை எதிர்த்து போராடும் சாகசங்கள் பலவும் அந்த விளையாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து யூபிஐ சாப்ட் நிறுவனம், இந்த விளையாட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தயாராக இருந்தாலும் இன்னும் பல மாதங்களுக்குப் பிறகே வர்த்தக ரீதியில் வெளியாகும் என்று கூறியுள்ளது.
அதேபோல் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களால் அதிக ஆர்வம் காட்டப்பட்டு வந்த “மேரியோ” விளையாட்டினை மேம்படுத்தும் வகையில் தற்போது டிஜிட்டல் விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல புதிய வீடியோ விளையாட்டுகள் கடந்த 12-ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள ஆர்பிஎம் அரங்கில் தொடங்கிய இ3 டிஜிட்டல் விளையாட்டு திருவிழாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. நடிகர்கள் யாரும் இல்லாமல் டிஜிட்டல் கதாபாத்திரங்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட சாகச படங்களும் வருகின்ற 15-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளது.