தன் வாழ்நாள் முழுவதும் பூமிக்கு அடியில் வாழும் அபூர்வ இன தவளையை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்று வனத்துறை, கேரள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
கேரளா மாநிலத்தில் அபூர்வமான பர்ப்பிள் தவளை என்று அழைக்கப்படும்,பன்றி மூக்கு தவளையை 2003ஆம் ஆண்டு டெல்லி பேராசிரியர் பிஜு முதன்முறையாக கண்டுபிடித்தார். இதையடுத்து 2007 ஆம் ஆண்டு வன ஆராய்ச்சியாளர் சந்தீப்தாஸ் இதுகுறித்து மேற்கொண்ட ஆராய்ச்சிக்கு விலங்கியல் பவுண்டேசன் விருது வழங்கப்பட்டது. இந்த தவளை இனம் வாழ்நாள் முழுவதும் பூமிக்கு அடியில் வாழும். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் மட்டும் வெளியில் வந்து இனப்பெருக்கம் செய்யும். பிறகு மீண்டும் பூமிக்குள் செல்லும்.
பெரிய உடம்பு, சிறிய கால், சிறிய தலை, உதடுகளை உடைய இந்த தவளை 170 கிராம் எடை கொண்டது. ஆறு முதல் ஒன்பது சென்டிமீட்டர் நீளம் உடையது. புழு பூச்சிகளை தன் நீண்ட நாக்கால் கவர்ந்து உண்டு வாழ்ந்து வருகின்றது. இது குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள முடியவில்லை என வனத்துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த இனம் அழிந்து வரும் பட்டியலில் சேர்ந்துள்ளது, இந்த இனத்தை பாதுகாக்க, இந்த தவளையை மாநிலமாக விலங்காக அறிவிக்க வேண்டும் என்று கேரள வனத்துறை, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.