சமூக வளைதளத்தில் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் 19 வயது கல்லூரி மாணவி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்த இளம்பெண்ணுக்கும், சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் கேசவ குமார் என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது குடும்பம் கஷ்டத்தில் வாடுவதால் கல்லூரி கட்டணம் செலுத்த பணம் வேண்டும் என கேசவ குமார் அந்த இளம்பெண்ணிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளம்பெண்ணும் தனது வீட்டிலிருந்த 35 ஆயிரம் ரூபாயை பெற்றோருக்கு தெரியாமல் கேசவகுமாரிடம் எடுத்துக் கொடுத்துள்ளார்.
மேலும் கேசவகுமார் அந்த இளம்பெண்ணிடம் பொய்யான காரணங்களைக் கூறி இரண்டு பவுன் தங்க நகை மற்றும் பணத்தை பறித்துள்ளார். அதன்பின் கேசவகுமாரின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால் அந்த இளம்பெண் அவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் கோபமடைந்த கேசவகுமார் அந்த இளம்பெண்ணை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உனது புகைபடங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த அந்த இளம்பெண் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிங்காநல்லூர் காவல்துறையினர் கேசவகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.