இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
தற்போது இந்தியாவில் கோவாக்சின், கோவிஷில்டு ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒன்றிய அரசுக்கு ரூ.150 விலையிலேயே கோவாக்சின் தடுப்பூசியை தொடர்ந்து வழங்க முடியாது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதர செலவுகளை ஈடுகட்ட தனியார் சந்தையில் கூடுதல் விலையில் மருந்து விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மூலம் தடுப்பூசி விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.