பாகிஸ்தானில் இருக்கும் இந்து தர்மசாலா கட்டிடம் இடிக்கப்படக்கூடாது என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்த பின்பு இந்துக்கள் மற்றும் சீக்கியர்களால் கைவிடப்பட்ட சொத்துக்கள் இடிபிபி என்ற வெளியேறிய அறக்கட்டளை சொத்து வாரியம் தங்களது பராமரிப்பில் வைத்துள்ளது. இந்நிலையில் ரமேஷ் குமார் என்ற சிறுபான்மையினரின் ஆணைய உறுப்பினராக உள்ளவர், இந்து தர்மசாலா கட்டிடத்தை இடிபிபி இடித்து தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் அதற்கு புகைப்படங்களை ஆதாரங்களாக சமர்ப்பித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இடிபிபி அமைப்பினர், புதிய கட்டிடத்தை அமைக்க சிந்து உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததாக தெரிவித்தனர். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான குல்சார் அஹமது இதனை ஏற்க மறுத்தார்.
மேலும், கடந்த 1932 ஆம் வருடத்திலேயே இந்து தர்மசாலா கட்டியதற்கான ஆதாரம் இருக்கிறது. எனவே அந்த கட்டிடம் பராமரிக்கப்பட வேண்டும். இது தொடர்பிலான அறிக்கையை சிந்து மாகாண புராதன கட்டட செயலாளர் வெளியிட வேண்டும். அங்கு மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. அங்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது என்று உத்தரவிட்டுள்ளார்.