இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், கத்தார் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரியை இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
கென்யா நாட்டில் மூன்று நாள் பயணத்தை முடித்துவிட்டு இன்று கத்தார் நாட்டிற்கு சென்ற மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், கத்தார் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியும், அந்நாட்டின் துணை பிரதமருமான முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியை கத்தார் தலைநகர் தோஹாவில் சந்தித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இந்தியாவுக்கு உறுதுணையாக இருந்து கொரோனா இரண்டாவது அலையை எதிர் கொண்டதற்காக தனது நன்றியை கத்தார் நாட்டிற்கு தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் பிராந்திய ரீதியிலான பிரச்சனைகள், இருநாட்டு உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கத்தார் வெளியுறவுத்துறை மந்திரி முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியுடன் கலந்து ஆலோசித்துள்ளார். இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளின் இந்த சந்திப்பானது இந்தியா-கத்தார் இடையே சில முரண்பாடுகள் நிலவி வரும் சூழலில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.