தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கினை ஒரு வாரத்திற்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தெரு விலங்குகளுக்கு உணவளிக்க யாருமில்லாததால் அவ்விலங்குகள் உணவின்றி வாடி வருகின்றன.
இந்நிலையில் வரும் காலத்தில் கொரோனா அதிகரித்து மீண்டும் முழு ஊரடங்கு வந்தால் கொரோனா ஊரடங்கினால் உணவின்றி தவிக்கும் தெரு விலங்குகளுக்கு உணவு கிடைப்பதற்கான திட்டத்தை தமிழக அரசு திட்டம் வகுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விலங்குகளின் பாதுகாப்பிற்கும், நாய்களுக்கான கருத்தடை நடைமுறையையும் மனிதாபிமான அடிப்படையில் செய்ய திட்டம் வகுக்க வேண்டுமென கூறியுள்ளது.