Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“30 வருஷமா பயன்படுத்துறோம்” ராணுவத்தினரின் திடீர் முடிவு… சிரமப்படும் பொதுமக்கள்…!!

30 ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த சாலையை ராணுவத்தினர் மூடியதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்குழி, கீழ் பாரத் நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக மேல் பாரத் நகரில் இருந்து பேரக்ஸ் செல்லும் சாலையை கடந்த 30 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் குன்னூர் ராணுவத்தினர் அந்த சாலையை முள் வேலி வைத்து அடைத்து விட்டதால் அத்தியாவசிய பணிகளுக்காக செல்லும் பொதுமக்கள் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சுற்றி பயணம் செய்கின்றனர். இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவரான ஜெகதீசன் மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் 30 ஆண்டு காலத்திற்கு மேல் அந்த சாலையை தாங்கள் பயன்படுத்தி வருவதாகவும், மாவட்ட கலெக்டரின் அறிவுரையின் படி ஊராட்சியின் 14-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் அதனை சிமெண்ட் சாலையாக மாற்றி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ராணுவத்தினர் அந்த சாலையை அடைந்து விட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதை குறிப்பிட்டுள்ளார். எனவே அந்த சாலையை ஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |