தென் ஆப்பிரிக்காவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வைரம் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள குவஹாலதி கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வைர கற்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த மக்களுக்கு அவர்களது தேடலில் கிடைக்கும் பொருள் வைரம் தானா ? என்பது உறுதியாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த கற்களை அந்த கிராமத்தில் முதன் முதலில் அடையாளம் கண்ட ஒருவர் “சமவெளி பகுதி ஒன்றில் பள்ளம் தோண்டிய போது அதில் வெள்ளை நிறத்தில் கற்களை பார்த்ததாகவும், அது கிரிஸ்டல் கற்களை போலவே பளபளப்பாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
அந்த செய்தியானது காட்டுத்தீயாக பரவ எல்லோரும் அந்த நிலப்பகுதியை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்” என்று கூறியுள்ளார். மேலும் அங்குள்ள மக்கள் அனைவரும் இதை நாங்கள் வைரம் என்று தாங்கள் நம்புவதாக உள்ளூர் மீடியாக்களுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதிலும் மெண்டோ சபெலோ எனும் 27 வயது இளைஞன் “நிலையான வேலை எதுவும் கிடைக்காத காரணத்தினால் நான் எந்த வேலை கிடைக்கிறதோ அந்த வேலையை பார்ப்பேன் என்றும், தன்னைப் போலவே தனது ஊரிலும் பல இளைஞர்கள் வேலை கிடைக்காமல் உள்ளதாகவும், இந்த பகுதியில் கிடைக்கும் கற்களை சேகரித்துக் கொண்டு வீடு திரும்பினால் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த தென் ஆப்பிரிக்க அரசு கனிமவள வல்லுனர்கள் குழுவை இந்த கற்களை ஆய்வு செய்யுமாறு அனுப்பியுள்ளதாகவும், ஆய்வின் முடிவுகள் வந்த பின்னரே அது வைரமா ? என்பது குறித்த தகவல் தெரிய வரும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் மூத்த குடிமக்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இந்த கற்களை எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அந்த நாட்டில் வேலை இல்லாத காரணத்தினாலும், பொருளாதாரத்தில் மிகவும் பின்னடைந்தாலும் மக்கள் ஒரே நேரத்தில் திரளாக அங்கு குவிந்துள்ளதாக கூறப்பட்டுகிறது. இதற்கிடையே வைர கற்களை சேகரித்து வரும் மக்கள் அதனை ரூ. 500 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அரசு இவ்வாறு மக்கள் திரளாக கூடுவது கொரோனா தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளனர்.