நெல்லையில் நேற்று கொரோனா நிவாரண நிதி 2,000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றது. தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தும் செயல்படுத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு அவர்களுக்கு உதவும் வகையில் கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளது. ஏற்க்கனவே ஒரு தவணை தொகையாக 2,000 ரூபாயும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டுளள்து. இதனையடுத்து இரண்டாவது தவணை தொகை நேற்று முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.
இதனைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 796 ரேஷன் கடைகளிலும் 2,000 ரூபாயும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள ரேஷன் கடையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு 2,000 ரூபாய் வழங்கி தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுபாஷினி, கூட்டுறவுத் துறை இணைபதிவாளர் அழகிரி, பாளையங்கோட்டை தாசில்தார் செல்வன் உட்பட பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் நிவாரண தொகையை பெறுவதற்கு வரும் பொதுமக்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.