உடல்நலக்குறைவால் தாயை இழந்த 14 வயது சிறுவனை காவல்துறையினர் மீட்டு குழந்தைகள் நலகாப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியில் கமலா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆறுமுகம் என்ற 14 வயது மகன் இருக்கின்றார். இந்நிலையில் தாயும், மகனும் பல மாதங்களாக அப்பகுதியில் இருக்கும் பயணிகள் நிழற்குடையில் வசித்து வந்துள்ளனர். இதனை அடுத்து கமலா காசநோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கமலாவின் உடலை கைப்பற்றி தனியார் அறக்கட்டளை மூலம் நல்லடக்கம் செய்துள்ளனர்.
இதனை அடுத்து தாயை இழந்து தனியாக நின்று கொண்டிருந்த சிறுவன் ஆறுமுகத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் இருக்கும் குழந்தைகள் நலகாப்பகத்தில் அச்சிறுவனை சேர்த்துள்ளனர். மேலும் சிறுவனுக்கு தேவையான புத்தாடைகள் மற்றும் சிறிது பணத்தை கொடுத்துள்ளனர்.