Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாலியல் புகார்…. கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் ஜாமீன் மனு தள்ளுபடி….!!!!

சென்னை அண்ணா நகரில் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வருபவர் கெபிராஜ். இவர் போரூரை அடுத்த கெடிலப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணிபுரிந்த போது, அங்கு படித்த ஒரு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது.  இந்த புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 31 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 நாட்கள் இவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இவர் ஜாமின் கேட்டு ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்த போது கெபிராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் 2 வாரங்களுக்கு மேலாக சிறையில் உள்ளார். மேலும் ஏற்கனவே அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். எனவே அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
அதே சமயம் காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், கெபிராஜ் மீது புகார் அளித்துள்ள மாணவியிடம் மட்டுமல்லாது பல மாணவிகளிடம் பாலியல் ரீதியான அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார். அதில் சிறுமிகளும் அடங்குவர் என்பதால், இவருக்கு எதிராக போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படலாம். எனவே இவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து நீதிபதி செல்வகுமார், மனுதாரர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வதற்கு வாய்ப்பு இருப்பதால், தற்போதைய சூழலில் அவருக்கு ஜாமின் வழங்க முடியாது எனக்கூறி அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Categories

Tech |