ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுக்கடையில் பாதுகாப்பிற்கு இருந்த ஊர்க்காவல் படை அதிகாரியை தாக்கிய 3 பேரில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தர்மராஜபுரம் பகுதியில் சூரியகுமார்(23), சந்துரு(20), தினேஷ் பாண்டியன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மார்க் கடைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் சமூக இடைவெளியுடன் நின்று மதுபாட்டில்கள் வாங்கி கொண்டிருந்துள்ளார். ஆனால் இந்த 3 பேர் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், வரிசையில் நிற்காமலும் தகராறில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர் காவல் படை அதிகாரி குழந்தைவேலு ஒழுங்காக இருக்கும்படி அந்த 3 பேரை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 3 இளைஞர்கள் அவர்கள் வைத்திருந்த மதுபாட்டிலை வைத்து தலையில் அடித்துள்ளனர். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பரமக்குடி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் பரமக்குடி போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சூரியகுமார் மற்றும் சந்துருவை கைது செய்துள்ளனர். இதனையடுத்து தலைமறைவான தினேஷ்பாண்டியனை தேடி வருகின்றனர்.