சிமெண்ட் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதிபட தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ஊரடங்கு காலம் என்பதால் தொழில் துறையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு தொழில் தொடங்க பலரும் முன்வருவர். புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்கனவே சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு முடிந்த பிறகு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு பலர் அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். அவர்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் தொழில்கள் மேற்கொள்ளப்படும். அதனால் சிமெண்ட் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
விலை குறைப்பு தொடர்பாக சிமெண்ட் உற்பத்தியாளர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த சிமெண்ட் விலை உயர்வால் சாமானிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பது அரசின் உறுதியான முடிவு. இதுகுறித்து நாளை அனைத்து கம்பி, சிமெண்ட் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கு அடுத்து விரைவில் நல்ல முடிவு வரும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.