அவதூறான தகவலை பரப்பி விடுவேன் என்று கூறி உடற்பயிற்சி ஆசிரியர் பல்கலைகழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பத்மஸ்ரீ பள்ளியில் ஆன்லைன் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொந்தரவு புகார் எழுந்ததையடுத்து ராஜகோபாலன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், சென்னை தடகள பயிற்சி மைய பயிற்சியாளர் நாகராஜன் ஆகியோரும் பாலியல் தொல்லை காரணமாக சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் சிறு வயது முதல் போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற இலட்சியம் கொண்டதால், தனது உடலை ஃபிட்டாக வைத்திருக்க விரும்பினேன். இதனால் முன்னாள் ராணுவ வீரர் சிவகுமார் என்பவரிடம் உடற்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டேன். சில நாட்களிலேயே அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார். உடற்பயிற்சி சொல்லி கொடுப்பது போல் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் பெற்றோரிடம் சொல்ல தயங்கி பயிற்சிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தேன். சம்பவ தினத்தன்று தனது செல்போனில் தொடர்பு கொண்ட சிவகுமார் ஆபாசமாக பேசி தனது ஆசைக்கு இணங்குமாறு அழைத்தார். அதுக்கு சம்மதிக்காவிட்டால் தன்னை பற்றி அவதூறு பரப்பி வருவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சிவகுமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.