சாலை அமைக்கும் பணியில் தகராறு ஏற்பட்டு 3 வாலிபரை கத்தியால் குத்திய குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எறையூர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும் சிப்காட் விரிவாக்கத்திற்கு சாலை அமைக்கும்பணியில் ஒப்பந்தமிட்டு பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் இப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அதே பகுதியில் வசிக்கும் உதயகுமார், சரத்குமார், விஜயகுமார் ஆகிய 3 பேரும் சாலை அமைக்கும் பணியை நாங்கள் எடுத்து நடத்துவோம் என சக்திவேலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இது குறித்து பேச சக்திவேலை தொலைபேசியில் அவர்கள் அழைத்திருக்கின்றனர்.
அதனால் சக்திவேல் பணி நடைபெறும் இடத்திற்கு சென்றுள்ளார். இதில் தன்னுடன் தனது பகுதியில் வசிக்கும் முருகன் மற்றும் சிவலிங்கம் ஆகியோரை உடன் அழைத்துச் சென்றுள்ளார். இதனால் அங்கே சரத்குமாருடன் இருந்த அன்பரசன், ரமேஷ் ஆகியோருக்கும் சத்தியவேல் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சரத்குமார் தரப்பினர் கோபமடைந்து முருகன், சக்திவேல், சிவலிங்கம் ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஒரகடம் காவல்துறையினர் தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த சிவலிங்கம், சக்திவேல், முருகன் ஆகிய 3 பேரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அன்பரசன், சரத்குமார், ரமேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.