நண்பர் வீட்டுக்குச் சென்று விட்டு வந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகுருநாதபுரம் பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 19 வயதுடைய கட்டிட தொழிலாளியான சிவராமன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிவராமன் சேர்ந்தமரம் பகுதியில் வசிக்கும் தனது நண்பரை சந்தித்த பிறகு திரும்ப வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிவராமன் ஆனைகுளம் பகுதியில் சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சிவராமன் உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று சிவராமனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.