ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டால் மீட்பு பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் சந்திப்பு ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டால் காவல்துறையினர் மேற்கொள்ளவேண்டிய மீட்பு பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா மற்றும் பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உபேந்திர குமார் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்றது. அப்போது ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தால் எந்த வகை சூழ்நிலை நிலவும் என்பதை ரயில்வே ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் சிலர் தத்ரூபமாக நடித்து காட்டினர்.
இதனையடுத்து குண்டுவெடிப்பில் சிக்கி சில பேர் ரத்த காயத்துடன் உடல் சிதறிக் கிடப்பது போன்றும் உயிருக்குப் போராடும் சிலரை காவல்துறையினர் மீட்பது போன்றும் நடித்துக் காட்டினர். மேலும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்துவது போன்றவை காவல்துறையினர் தத்ரூபமாக நடித்து காட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து குண்டு வெடிப்பில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களை எப்படி மீட்பது அவர்களுக்கு எப்படி முதலுதவி சிகிச்சை கொடுப்பது போன்ற ஒத்திகையும் காவல்துறையினர் செய்து காட்டியுள்ளனர்.