பாக்கெட்டுகளில் அடைத்து வீடு வீடாக சாராயம் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன்பாளையம், வைத்தியகவுண்டன் புதூர், பணைமடல் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் மலைப்பகுதியில் இருந்து லாரிகளில் தினமும் சாராயம் கொண்டு வரப்பட்டு அதனை சிறு சிறு பாக்கெட்டுகளாக தண்ணீர் போன்று தயார் செய்கின்றனர்.
அதன்பிறகு சாராயம் தேவைப்படும் நபர்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்கின்றனர். இதனால் அப்பகுதியில் சாராய விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இப்பகுதியில் சாராயம் விற்பனை அதிகமாக இருப்பதால் அதனை தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.