மாமியாரின் தொல்லை தாங்க முடியாமல் கர்ப்பிணி போல் நடித்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் கனிமொழியின் மாமியார் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்று கூறி தனது மருமகளுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் மாமியாரின் தொந்தரவு தாங்க முடியாமல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கனிமொழி தான் கர்ப்பமாக இருப்பதாக பொய் கூறியுள்ளார். இதனை கேட்டதும் அவரது கணவரும், மாமியாரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து ரஞ்சித்குமார் தனது மனைவியை பரிசோதனைக்காக அழைத்து சென்றுள்ளார். அதன்பின் ரஞ்சித்குமார் ஸ்கேன் பரிசோதனை முடிவை வாங்குவதற்காக மருத்துவமனைக்கு சென்ற சமயத்தில் தான் கர்ப்பமாக இல்லை என்பது கணவருக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயத்தில் கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மாதவரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.