ரீத்தாபுரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக குளச்சல் அருகே உள்ள சிங்காரவேலர் காலனி பகுதியில் டி.வி.எம். கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரீத்தாபுரம் பகுதியில் உள்ள காக்கைகுளம், பெரியகுளம், தாமரைகுளம் ஆகிய குளங்கள் நிறைந்ததால் அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. இவ்வாறு சேதமடைந்த பகுதிகளை கடந்த மாதம் 28-ஆம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து அமைச்சர் மனோ தங்கராஜ் மீண்டும் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதிகளுக்குச் சென்று குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததற்கான காரணங்களை பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்துள்ளார்.
அதன்பின் கடலுக்கு தண்ணீர் செல்லும் ஓடையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்வதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்யும்படி பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இதனைத்தொடர்ந்து அந்தப் பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்களின் கோரிக்கைகளை அமைச்சர் மனோ தங்கராஜ் கேட்டறிந்து அதனை தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச்சென்று நிரந்தர தீர்வு அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வசந்தி, குழித்துறை பட்டணங்கால்உதவி செயற்பொறியாளர் கிங்ஸ்லி, கருங்கல் பட்டணங்கால் உதவி பொறியாளர் சுதர், அருட்பணியாளர்கள் செல்வம், ராஜ், ரீத்தாபுரம் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் ரோஸ் லேன்ட், கிராம நிர்வாக அலுவலர் சோபி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.