அரசு ஊழியர் வீட்டில் ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தீரன் பகுதியில் சங்கர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கலைமணி என்ற மனைவி இருக்கிறார். இவர் ஆண்டிமடம் பகுதியில் கல்வி வட்டார வளமைய மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சங்கர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரவு நேரத்தில் உறங்கி கொண்டிருந்தார். இதனையடுத்து இரவு நேரத்தில் வீட்டின் பின் பகுதியில் திடீரென நுழைந்த மர்ம நபர்கள் அங்கு தண்ணீர் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்மோட்டாரை திருடியதோடு வீட்டின் முன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், உணவருந்தும் மேஜை, கட்டில் உள்ளிட்ட ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
அந்த தீயானது கொழுந்து விட்டு எரிந்து வெடித்ததில் அங்குள்ள மின் இணைப்புகள் அனைத்தும் எரிந்து நாசமாகி விட்டது . இதனையடுத்து உறங்கிக் கொண்டிருந்த சங்கர் ஏதோ வெடிப்பது போல் சத்தம் கேட்டு உடனடியாக கண் விழித்து வெளியே வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பிறகு கட்டில், உணவருந்தும் மேஜை மற்றும் மோட்டார் சைக்கிளில் எரிந்து கொண்டிருந்த தீயை குடும்பத்தினர் உடனடியாக அணைத்து விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீடு புகுந்து ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.