அரியலூரில் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள ரமணசரஸ்வதி மக்கள் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 13ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த டி.ரத்னாவை தற்போது சமூகநல இயக்குனராக பணி இடமாற்றம் செய்துள்ளனர். இதனால் தமிழக அரசு அரியலூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியாளராக இந்து சமய அறநிலை துறை கூடுதல் கமிஷனராக பணியாற்றி வந்த பி.ரமண சரஸ்வதியை பொறுப்பு ஏற்க உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி பி.ரமண சரஸ்வதி அரியலூரில் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் 1999ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டுகள்வரை துணை மாவட்ட ஆட்சியாளராகவும், 2003 முதல் 2007 ஆம் ஆண்டு வரை தென்காசியில் வருவாய் கோட்டாட்சியராகவும் ,2009 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை நெல்லை மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றி உள்ளார். இதனை தொடர்ந்து 2012 முதல் 2017ஆம் ஆண்டு வரை உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இணை ஆணையராகவும், 2017 முதல் 2020 ஆம் ஆண்டுகள் வரை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணை இயக்குனராகவும், 2020 முதல் 2021 ஆம் ஆண்டு வரை இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் கமிஷனராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற ரமண சரஸ்வதி நிருபர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அதில் அவர் தொழில் நகரமான அரியலூர் வளர்ச்சிக்காகவும், கல்வி, வேளாண்மை மற்றும் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், உள்கட்டமைப்பு, பொது சுகாதாரம் மற்றும் இருப்பிடம் போன்றவற்றிக்கு முதல்வர் திட்டத்தின்படி முக்கியத்துவம் வழங்கி பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளும் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் தங்குதடையின்றி சென்றடைய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரியலூர் மாவட்டத்தில் லட்சுமி பிரியா, விஜயலட்சுமி, ரத்னா, அனுஜார்ஜ் ஆகிய நான்கு பெண்கள் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து தற்போது ஐந்தாவது பெண் மாவட்ட ஆட்சியராக ரமண சரஸ்வதி பொறுப்பேற்றுள்ளார்.