காட்டு யானை தாக்கியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொளப்பள்ளி பகுதியில் காட்டு யானைகள் புகுந்து குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் குறிஞ்சி நகர் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளியான பாலகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து புதர் மறைவில் நின்று கொண்டிருந்த காட்டு யானை திடீரென பாலகிருஷ்ணனை தாக்கி தூக்கி வீசிவிட்டது.
அதன் பின் அக்கம் பக்கத்தினர் உடனடியாக சத்தம் எழுப்பி அந்த காட்டு யானையை விரட்டிய பிறகு பாலகிருஷ்ணனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து வனத்துறையினர் சார்பில் காட்டுயானை தாக்கி உயிரிழந்த பாலகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.