25 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் சென்று செலுத்திக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பபூசி செலுத்தி கொள்ளலாம் என அரசு அறிவித்ததை அடுத்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு பெரும்பான்மையானவர்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு ஆர்வம் காட்டினர். இந்நிலையில் கடந்த 14-ஆம் தேதி வந்த தடுப்பூசிகள் தீர்ந்து போனதால் முகாம்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் மக்களின் பயன்பாட்டுக்காக தடுப்பூசிகளை வரவழைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
அதன்படி 12 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டு குடோனில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியபோது, மாவட்டத்திற்கு வந்த தடுப்பூசி மருந்துகளை அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்கள் போன்ற தடுப்பூசி முகாம்களில் பொதுமக்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே சிறப்பு முகாம்கள் என 25 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் சென்று செலுத்திக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.