இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. தற்போது இந்தியாவில் கோவாக்சின், கோவிஷில்டு ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, பூஸ்டர் ஷாட் எனப்படும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை விரைவில் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை டெல்டா வைரஸுக்கு எதிராக வேறு எந்த தடுப்பூசியை காட்டிலும் ஸ்புட்னிக் வி சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளது. இதை இறக்குமதி செய்யும் பொறுப்பை டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.