இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. தற்போது இந்தியாவில் கோவாக்சின், கோவிஷில்டு ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாடு முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்னும் மூன்று நாட்களில் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பகுதிகளில் 56 லட்சம் டோஸ் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளது. வீணான தடுப்பூசி உட்பட இதுவரை 25,10,03,417 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.