மதுபோதையில் மகன் தனது தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தப்பிள்ளையூர் பகுதியில் சமையல் தொழிலாளியான தனபால் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரேசன், ஜெயசீலன் என்ற இரு மகன்களும், கிரேசி என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த சில வருடங்களாக தனபாலனின் மகனான பிரேசன் என்பவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் தனபாலுக்கும், பிரேசனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரேசன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு சென்று தனது தந்தையிடம் தகராறு செய்துள்ளார். இந்த தகராறில் கோபமடைந்த பிரேசன் தீடீரென அருகிலிருந்த கட்டையை எடுத்து தனபாலை தாக்கி கீழே தள்ளி விட்டார்.
இதனையடுத்து கீழே விழுந்த தனபாலின் தலையில் அங்கு கிடந்த பாத்திரம் வெட்டியதால் ரத்த வெள்ளத்தில் தனபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து அலறி சத்தம் போட்டுள்ளனர். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தனபாலின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனது தந்தை என்று கூட பாராமல் தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக பிரேசனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.