தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் கோவில்களில் தரிசனத்திற்கு மட்டும் அனுமதியளிக்கப்படவில்லை. இதனால் கோவில்கள் எப்பொழுது திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழ்நாட்டில் கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை என்ற நிலை வரும்போது கோயில்கள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆட்சி ஆமை வேகத்தில் செயல்பட்டது. ஆனால் தற்போதைய ஆட்சி முயல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.