பெண் காவலரை வழி மறித்து கை விரலை கடித்து விட்டு தப்பி ஓட முயற்சி செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடைக்கட்டு பகுதியில் திருஞானம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் ஜெயங்கொண்டான் காவல் நிலையத்தில் எழுத்தாளராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு இளவரசி என்ற மனைவி இருக்கிறார். இவர் அதே காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இளவரசி வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சின்னவளையம் பகுதிக்கு சென்றபோது அவ்வழியில் மது போதையில் 2 பேர் சாலையின் நடுவில் நின்று கொண்டு இவரின் மோட்டார் சைக்கிளை கைககாட்டிநிறுத்தி உள்ளனர்.
இதனையடுத்து அந்த இரண்டு பேரும் இளவரசியிடம் லிப்ட் கேட்டபோது அவர் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே இறங்கி இவ்வாறு சாலையின் நடுவில் நின்று கொண்டா லிப்ட் கேட்பது என அவர்களிடம் கேட்டுள்ளார். அதன்பிறகு அவர்கள் இருவரும் இணைந்து கீழே கடந்த கட்டையை எடுத்து திடீரென இளவரசியின் தலையில் தாக்கி விட்டனர். இதில் இளவரசி ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர் தலையில் எதுவும் அடிபடவில்லை. ஆனாலும் இளவரசியிடம் அந்த இரண்டு நபர்களும் விடாமல் தகராறு செய்ய முயற்சி செய்துள்ளனர்.
இதனை அறிந்த இளவரசி தற்காப்புக்காக அவர்களின் சட்டையைப் பிடித்து கீழே தள்ளி விட முயற்சி செய்தபோது அவர்கள் இருவரும் இளவரசியின் கை விரலை பிடித்து கடித்து விட்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர்.இதனால் இளவரசியின் கைவிரலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்ததால் அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று தப்பி ஓட முயற்சி செய்த இரண்டு பேரையும் பிடித்து விட்டனர். இதனையடுத்து இளவரசி அவர்கள் இருவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
அதன் பிறகு காவல்துறையினர் அந்த இரு நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் இருவரும் கீழ தெரு பகுதியில் வசிக்கும் இளங்குமரன் மற்றும் பிரபாகரன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்ததும் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல பெட்ரோல் பங்க் உரிமையாளர் வாகனத்தை தராததால் மது போதையில் சாலையில் நின்று லிப்ட் கேட்டு தகராறு செய்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண் காவலரை தாக்கிய குற்றத்திற்காக இரண்டு நபர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.