தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. எனவே மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே ஆல்பா செய்யப்பட்டனர்.
ஆனால் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து குழப்பம் நீடித்து வந்த நிலையில் பாடவாரியாக மதிப்பெண்கள் வழங்காமல் தேர்ச்சி என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் +1 மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு சான்றிதழ்களில் ஏதாவது ஒரு வழிமுறையை பின்பற்றி மதிப்பெண்களை பெற வழிவகை செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். மார்க் இல்லாமல் தேர்ச்சி மட்டுமே குறிப்பிடப்படும் என்ற அறிவிப்பால் மாணவர்கள், பெற்றோர்கள் குழப்பமடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு சான்றிதழ் மார்க் இல்லாமல் இருந்தால் எதிர்காலத்தில் அரசு வேலைவாய்ப்பு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.