திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டையில் பழைய கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த தொழிற்சாலையில் நேற்று இரவு தொழிலாளர்கள் 50 பேர் பணியாற்றி வந்தனர். இன்று அதிகாலை 5 மணியளவில் தொழிற்சாலையில் முன் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பழைய டயர்கள் இருந்த பகுதியில் திடீரென தீப்பற்றியது.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தொழிற்சாலையை ஒட்டி சிலிண்டர் உற்பத்தி செய்யும் தொழில்சாலை இருப்பதால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களை அனுமதிக்காத வகையில் வளையம் அமைத்து தீவிரமாக தீயை அணைத்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் 15 லட்சம் மதிப்பிலான டயர்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.