ஆயுததாரிகள் 5 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் உள்ள கெப்பி மாகாணத்தில் திடீரென்று பள்ளியில் நுழைந்த ஆயுததாரிகள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 5 ஆசிரியர்கள் மற்றும் 50 மாணவர்களை கடத்திச் சென்றனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். அப்போது ஆயுததாரிகளுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் போலீசார் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தேடும் பணி தொடர்ந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த கடத்தலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.இதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் நைஜீரியாவில் சம்ஃபாரா மாகாணத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 100 மாணவிகளை துப்பாக்கி ஏந்திய தீவிரவாத அமைப்பினர் கடத்திச் சென்றுள்ளனர். அதன் பிறகு அவர்கள் அரசுடனான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் மாணவிகளை விடுவித்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே நைஜீரியாவில் தீவிரவாத தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக நைஜீரியாவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதலில் நடத்தியும் பள்ளி படிக்கும் மாணவர்களை கடத்துதல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் 2002 ஆம் ஆண்டு சாதாரணமாகத் ஆரம்பிக்கப்பட்ட போகோ ஹராம் இயக்கம், வடகிழக்கு நைஜீரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது .இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பல பள்ளிகளில் இருந்து சுமார் 800 மேற்பட்ட மாணவர்கள் கடத்தப்பட்டுள்ள நிலையில் சில எண்ணிக்கையிலானோர் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ள. ஆனால் எஞ்சிய மாணவர்களின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை .