வேலூரில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், உதவி கலெக்டர் ஐஸ்வர்யா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் குறித்தும், தடுப்பு பணிகள் மற்றும் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார்.
அப்போது கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியபோது, இந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் வேளையில் தொற்று பரவல் அதிகரித்தால் கட்டுப்படுத்துவது கடினம் என்று கூறியுள்ளார். எனவே மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கக் கூடாது என்றும் உள்ளாட்சி அமைப்புகள் அந்தந்த பகுதிகளில் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கலெக்டர் கூறியுள்ளார். இதனையடுத்து சளிமாதிரி பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியானால் அவர்களை உடனடியாக கோவிட் கேர் சிகிச்சை மையத்தில் அனுமதிக்க வேண்டும். அதன்பின் கிராம பகுதிகளில் பொதுமக்கள் கூடி நின்று பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் ஆட்டோக்கள் மூலம் கூடுதலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.