மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் முதல்கட்ட பரிகார பூஜையான மிருத்யுஞ்சய ஹோமம் கோலாகலமாக நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்தால் ஏற்ப்பட்ட கருவறை மேற்கூரையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதனையடுத்து கோவிலில் 2 நாட்கள் தேவபிரசன்னம் பார்க்கப்பட்டு, கோவிலை விரிவாக்கம் செய்வது உட்பட பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் முதல் பரிகாரமாக மிருத்யுஞ்சய ஹோமம் நடைபெற்றது. எனவே அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு மிருத்யுஞ்சய ஹோமம், நண்பகல் 12 மணிக்கு பரிகார நவகலச பூஜை, 1 மணிக்கு வழக்கமான உச்ச பூஜை போன்றவை கோலாகலமாக நடைபெற்றது.
இதில் ஹைந்தவ சேவா சங்கம், தேவி தேவா சங்கம், பெரிய சக்கர தீவெட்டி முன்னேற்றக்குழு, ஸ்ரீதேவி கலா மன்றம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து பிரசன்னத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மலையாள மொழியில் குறிப்பு எழுதப்பட்டு இருப்பதனால் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து இன்னும் ஓரிரு நாளில் அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் ஆணையருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின் நடத்த வேண்டிய பரிகார பூஜைகள், கட்டுமானங்கள் குறித்து ஆணையர் அலுவலகம் முடிவுசெய்யும் என கோவில் நிர்வாகம் வட்டாரம் தெரிவித்துள்ளது.