முன்விரோதம் காரணமாக அண்ணன் தம்பி மோதி கொண்டதால் காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வளவட்டி குப்பம் பகுதியில் விவசாயியான ராஜாங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மனோகரன், இளங்கோவன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடப் பிரச்சினை காரணமாக மனோகரனுக்கும், இளங்கோவனுக்கு இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த தகராறில் மனோகரனின் உறவினரான உத்தமராசு என்பவரும் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து இளங்கோவன் மற்றும் மனோகரன் இருவரும் தனித்தனியே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மனோகரன், இளங்கோவன் மற்றும் உத்தமராசு ஆகிய மூன்று பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.