ஒரு தலை காதல் விவகாரத்தில் வாலிபரை நண்பர்கள் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்ன கோட்டகுப்பம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வகுமாரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் குப்புசாமி என்ற வாலிபர் சித்ராவின் தங்கையான லதா என்பவரை ஒருதலையாக காதலித்துள்ளார். இதற்கிடையில் லதாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்டதை அறிந்து குப்புசாமி கோபமடைந்தார்.
இந்நிலையில் சின்ன கோட்டகுப்பம் சன் சிட்டி நகர் அருகில் மது குடிப்பதற்காக குப்புசாமி தனது நண்பர்களான சேது, விஜி, கன்னியப்பன் ஆகியோருடன் செல்வகுமாரை அழைத்து சென்றுள்ளார். இதனை அடுத்து குப்புசாமி தான் காதலித்த பெண்ணை வேறு ஒருவருக்கு எப்படி நிச்சயம் செய்து வைக்கலாம் என்று கூறி செல்வகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த குப்புசாமி தனது நண்பர்களுடன் இணைந்து செல்வகுமாரை கத்தியால் சரமாரியாக குத்தியதோடு, அவர் மீது பாறாங்கல்லை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செல்வகுமாரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலையாளிகள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.