கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெங்கிடாபுரத்தில் இருந்து பல்லடம் நோக்கி தனியார் பனியன் நிறுவனத்திற்கு சொந்தமான வேன் ஒன்றுபுறப்பட்டுள்ளது. இந்த வேனை முத்துக்கருப்பன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருக்கு உதவியாக வரதராஜன் என்பவரும் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த வேன் வடுகபாளையம் நால்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற வாகனம் திடீரென ஒரு புறம் திரும்பி விட்டது.
இதனையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்கிருந்த செல்போன் கடையின் பந்தல், வீட்டின் பந்தல் போன்றவற்றை உடைத்துக்கொண்டு ராமசாமி என்பவரின் வீட்டு வாசலில் மேல் ஏறி நின்று விட்டது. அப்போது அந்த வீட்டில் இருந்த சத்யா மற்றும் அவரது இரண்டு மகள்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். இதனையடுத்து விபத்தில் காயமடைந்த முத்துக்கருப்பன் மற்றும் வரதராஜன் ஆகிய இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த பல்லடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.