கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி அளித்த புகாரின்படி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை பகுதியில் செல்வராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பத்தூர் பகுதியில் தனியார் கல்லூரி எதிரில் டீக்கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். இவருக்கு அகிலா என்ற மனைவியும், தருணிஸ் என்ற மகனும் இருக்கின்றனர். இவர்கள் கல்லாத்தூர் பகுதியில் புதிதாக கட்டியிருக்கும் வீட்டில் தினசரி இரவில் அங்கு தங்கி வருகின்றனர். இந்நிலையில் செல்வராஜி தனது மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூர் பகுதிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனையடுத்து கருப்பனூர் கூட்ரோடு அருகில் சாலையோரம் உள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் செல்வராஜி இறந்து கிடப்பதைக் கண்டு மனைவி அதிர்ச்சியடைந்தார்.
இதனைதொடர்ந்து செல்வராஜி நண்பர்களிடம் மனைவி அகிலா விசாரித்துள்ளார். அதற்கு நண்பர்கள் நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து மது அருந்திவிட்டு சென்று விட்டோம் என்றும் செல்வராஜி வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சென்றதாகவும் கூறியுள்ளனர். இதுகுறித்து அவரது மனைவி அகிலா தனது கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.