காவல் நிலைய வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 3 வாகனங்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கின்போது சுற்றி திரிந்தவர்களின் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டதை காவல்துறையினர் தினசரி 10 வாகனங்களை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வேறு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல்துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து வாகனத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தும் 2 ஆட்டோக்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது.
கன்னியாகுமரி பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் காவல் நிலையத்திற்குள் புகுந்து தூங்குவது வழக்கம் என்றும் குப்பைகளை தீ வைத்து எரிப்பார்கள் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர். இவ்வாறு குப்பைகளை எரிக்க முயன்றபோது தீ ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது பரவியதா அல்லது சமூக விரோத கும்பலின் செயலாக இருக்குமா என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கு இருக்கக்கூடிய சி.சி.டிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.